உயிரெழுத்து என்பது உயிருள்ள பொருள்களில் இருந்து பிறக்கும் வெவ்வேறு ஒலிகளைக் குறிக்கும் எழுத்து வடிவமாகும். தமிழில் உள்ள மொத்த உயிரெழுத்துகளின் எண்ணிக்கை பன்னிரண்டு.
உயிர் எழுத்துகள் | எண்ணிக்கை |
---|---|
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ |
12 |
ஏன் அகரம் என்று பெயர்?
12 உயிரெழுத்துகளில் முதலாவதாக வருவது ‘அ’ என்னும் உயரெழுத்து. ‘அ’ என்ற எழுத்தைத் தமிழ் மொழியில் “அகரம்” என்று அழைக்கிறோம்.
அ + கரம் = அகரம்
இங்கு “கரம்” என்பது சாரியை. சாரியை என்றால் சார்ந்து மட்டுமே வரக்கூடிய சொல். தனக்கென எந்தப் பொருளையும் உணர்த்தாமல் எளிமையான உச்சரிப்பிற்காக மட்டுமே இணைவது சாரியை. இயல்பாக வாக்கியங்களில் ‘அ’ என்று பயன்படுத்துவதைக் காட்டிலும் “அகரம்” என்று பயன்படுத்துவது எளிமையாகவும் செவிகளுக்கு இனிமையாகவும் இருக்கும்.
சான்று:
எனக்கு அ எழுதப் பிடிக்கும். ❌
எனக்கு அகரம் எழுதப் பிடிக்கும். ✅
உயிரெழுத்தின் இரு பிரிவுகள்
உயிரெழுத்துகள் ஓசையின் அடிப்படையில் குறில், நெடில் என இரண்டு பிரிவுகளாக உள்ளன.
1. குறில்
அகரம் முதலான ஐந்து எழுத்துகள் குறுகிய ஓசையைக் கொண்ட உயிரெழுத்துகள் ஆகும். குறில் எழுத்துகளை உச்சரிக்கத் தேவைப்படும் சக்தியின் அளவு குறைவானது. குறைந்த அளவு சக்தியுடன் உச்சரிப்பதால் குறில் எழுத்துகளின் ஒலி அளவும் குறுகியதாகவே இருக்கும். சுருங்கக் கூறுவதாயின், குறுகுவது குறில்.
குறில் எழுத்துகளை “கரம்” என்ற சாரியை சேர்த்து அழைக்கிறோம்.
அ + கரம் = அகரம்
இ + கரம் = இகரம்
உ + கரம் = உகரம்
எ + கரம் = எகரம்
ஒ + கரம் = ஒகரம்
குறில் எழுத்துகள் | எண்ணிக்கை | பெயர் |
---|---|---|
அ இ உ எ ஒ |
5 | அகரம் இகரம் உகரம் எகரம் ஒகரம் |
2. நெடில்
குறில் எழுத்துகளை “கரம்” என்ற சாரியை சேர்த்து அழைப்பதைப் போன்று நெடில் எழுத்துகளை “காரம்” என்ற சாரியை சேர்த்து அழைக்கிறோம். ஆகாரம் முதலான ஏழு எழுத்துகள் நெடில் ஓசையைக் கொண்ட உயிரெழுத்துகள் ஆகும். நெடில் எழுத்துகளை உச்சரிக்கத் தேவைப்படும் சக்தியின் அளவு குறிலைவிட அதிகமானது. அதிக அளவு சக்தியுடன் உச்சரிப்பதால் நெடில் எழுத்துகளின் ஒலி அளவும் நீண்டதாகவே இருக்கும். சுருங்கக் கூறுவதாயின், நீள்வது நெடில்.
நெடில் எழுத்துகளை “காரம்” என்ற சாரியை சேர்த்து அழைக்கிறோம்.
ஆ + காரம் = ஆகாரம்
ஈ + கரம் = ஈகாரம்
ஊ + கரம் = ஊகாரம்
ஏ + கரம் = ஏகாரம்
ஐ + கரம் = ஐகாரம்
ஓ + காரம் = ஓகாரம்
ஔ + காரம் = ஔகாரம்
நெடில் எழுத்துகள் | எண்ணிக்கை | பெயர் |
---|---|---|
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ |
7 | ஆகாரம் ஈகாரம் ஊகாரம் ஏகாரம் ஐகாரம் ஓகாரம் ஔகாரம் |